கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் - செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2022_ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12_ஆம் தேதி மர்மமான முறையில் மாடியில் இருந்து விழுந்து மரணம் அடைந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், பள்ளி நிர்வாகத்தினர் கொலை செய்துவிட்டதாகவும் கூறி ஸ்ரீமதியின் உறவினர்களும், கிராம மக்களும், பல்வேறு அரசியல் அமைப்புகளை சேர்ந்தவர்களும் பெரிய அளவில் தொடர் போராட்டங்கள் நடத்தினர். மேலும் இது தொடர்பாக மாணவியின் தாயார் செல்வி நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்கு நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரீமதியின் மரணம் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் சில யூடியூப் சேனல்களில் தவறான தகவல்கள் வெளிவருவதாக கூறி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிடம் ஸ்ரீமதியின் தாயார் செல்வி புகார் அளித்துள்ளார்.
நேற்று அளித்த அந்த புகாரில் அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மர்மமான முறையில் எனது மகள் ஸ்ரீமதி இறந்தது சம்பந்தமாக சின்னசேலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சி.பி.சி.ஐ.டி விசாரணையிலும் சின்னசேலம் காவல் நிலையத்திலும் ஸ்ரீமதியின் மரணம் சந்தேக மரணம் என்றுதான் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் பள்ளி தரப்பினர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர். அவர்களின் ஜாமின் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பாலியல் பலாத்காரமும் இல்லை கொலையும் இல்லை என்றும், இது தற்கொலை தான் என்றும் பதிவு செய்தார். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 'உயர்நீதிமன்ற நீதிபதி சொன்ன அனைத்து கருத்துகளையும் நீக்க வேண்டும்' என தீர்ப்பளித்து உள்ளது.
இந்த நிலையில் ஒரு பிரபல சேனலில் எப்பொழுதும் தற்கொலை என்று கூறி என்னையும், என் கணவரையும், எங்கள் மகளையும் அவதூறாக பேசி, எங்களது புகைப்படங்களும் பரப்பப்பட்டு வருகிறது. எனவே அந்த யூடியூப் சேனலில் உள்ள எங்கள் குடும்பம் தொடர்பான அனைத்து வீடியோக்களையும் நீக்கி, அந்த யூ டியூப் சேனல் மற்றும் அதில் விவாதிப்போர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வின் போது ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.