தேன்கனிக்கோட்டை அருகே, மூத்த மகள் தற்கொலை செய்து கொண்ட துக்கத்தால், மற்றொரு மகளைக் கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொரட்டகிரியைச் சேர்ந்தவர் ரவி (வயது 42). பொக்லைன் இயந்திர ஓட்டுநர். இவருடைய மனைவி கங்கம்மா (வயது 36). இவர்களுக்கு ராணி (வயது 17), மோனிஷா (வயது 7) என இரண்டு மகள்கள் இருந்தனர்.
மூத்த மகள் ராணி, தேன்கனிக்கோட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். சரியாக படிக்கவில்லை எனக்கூறி கங்கம்மாள் அடிக்கடி திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த ராணி, மார்ச் 11ஆம் தேதியன்று வீட்டில் இருந்த எலிக்கொல்லி மருந்தைத் தின்றுள்ளார்.
இதையறிந்த பெற்றோர், மகளை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மார்ச் 13ஆம் தேதி ராணி உயிரிழந்தார்.
தான் திட்டியதால்தான் ராணி இப்படியொரு முடிவை தேடிக்கொண்டாள் எனக்கூறி கங்கம்மாள் வீட்டில் அழுது கொண்டே இருந்திருக்கிறார். துக்கத்தில் இருந்தும், குற்ற உணர்வில் இருந்தும் மீளாத கங்கம்மாள், ஒருகட்டத்தில் தானும் தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்தார்.
மற்றொரு மகளை மட்டும் தனியாக விட்டுவிட்டுச் செல்ல மனமில்லாத அவர், மூன்று நாள்களுக்கு முன்பு, சிறுமி மோனிஷாவுக்கு முதலில் எலிக்கொல்லி மருந்தை சாப்பிடக் கொடுத்துள்ளார். அதன்பிறகு அந்த மருந்தை தானும் தின்றுள்ளார்.
இருவரும் வீட்டில் மயங்கிக் கிடப்பதை அறிந்த ரவி, அவர்களை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி தாய், மகள் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தாய் திட்டியதால் மூத்த மகள் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்காமல், மற்றொரு மகளைக் கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொரட்டகிரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.