தமிழகத்தில் நாளுக்கு நாள் நிலையில் கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது திருச்சியில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,''கரோனா சிகிச்சைக்கான தகவல்களை பெற கட்டளை அறை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள 14 மாவட்டங்களுக்கு 22 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்தை தொடர்ந்து கூடுதலாக தமிழகத்திற்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாழ்த்து தெரிவிக்க வந்த அதிகாரிகளிடம் கரோனா தடுப்பு பணிகள் குறித்துதான் அதிகம் ஆலோசித்தேன்.
ஆட்டோ டாக்சி உரிமையாளர்கள் சாலைவரி கட்டுவதற்கு மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்து இருக்கிறோம். 2.7 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. உள்ளபடி சொன்னால் ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியை விட இந்த கரோனாவை கட்டுப்படுத்துவதுதான் எங்களுக்கு உள்ளபடியே உளப்பூர்வமான மகிழ்ச்சியாக இருக்கும். அப்போதுதான் நாங்கள் முழுமையாக மகிழ்ச்சி அடைவோம் அதில் எந்த மாற்றமும் கிடையாது'' என்றார்.