திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தாலுகா மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காமராஜர் நீர்த்தேக்கம் வழியாக குடகனாறு வந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆறு ஆத்தூர் தாலுகா மல்லையபுரம். வீரக்கல் அனுமந்தராயன் கோட்டை, மயிலாப்பூர் உட்பட 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக வேடசந்தூர் மற்றும் கரூர் காவிரியில் கலக்கிறது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பல வருடங்களாக குடகனாறு ஆற்றை மட்டுமே நம்பியுள்ளனர்.
இந்நிலையில் 110 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லும் இந்த ஆற்றில் மேல் பகுதியில் ராஜவாய்க்கால் என்ற இடத்தில் தடுப்பு அணை கட்டப்பட்டதால் நான்கு வருடங்களாக குடகனாறு ஆற்றில் தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் சாலை மறியல் வீடுகளில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பு போன்ற பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில் மாவட்ட நிர்வாகத்தால் கடந்த மாதம் பத்து நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டு மீண்டும் அடைக்கப்பட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்து போராட்டம் நடத்தி வந்த சூழ்நிலையில் இன்று திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் பித்தளைப்பட்டி பிரிவு அருகே பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து எஸ்.பி. ராவண பிரியா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்படி இருந்தும் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட தவிர்த்தனர். அதன் பிறகு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்படி இருந்தும் பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட பொது மக்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
அதன்பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டது இது சம்பந்தமாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கேட்டபோது, குடகனாற்றில் உடனடியாக எங்களது பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். வருடத்தில் 180 நாட்கள் கண்டிப்பாக குடகனாறு ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். அந்த தண்ணீர் இல்லாததால் விவசாயமும் பார்க்கமுடியவில்லை குடிக்கவும் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். அதனால தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் இல்லையென்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்கள்.