Skip to main content

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு - வைகோ கோரிக்கை

Published on 01/09/2017 | Edited on 01/09/2017
10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு - வைகோ கோரிக்கை

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிறைவாசிகளைப் பரோல் விடுப்பில் அனுப்புவது ஒரு மனிதாபிமான நடவடிக்கை ஆகும். குடும்பத்தினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது குடும்பத்தில் ஏற்படும் நற்காரியங்களில் பங்கு ஏற்கவோ, குடும்பத்தில் ஏற்படும் துயரச் சம்பவங்களில் அல்லது அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய அவசியம் கருதியோ பரோல் விடுப்பு தரப்படுகின்றது. 

அப்படி விடுப்பில் செல்லும் சிறைவாசி, தவிர்க்க இயலாத காரணங்களால் குறிப்பிட்ட நாளில் சிறைக்குத் திரும்பி வர இயலாமல் ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்பட்டு விட்டால் கூட, இந்தியத் தண்டனைச் சட்டம் 224 பிரிவுகளின் கீழ் மேலும் தண்டிக்கப்படுகின்றனர். இதனால் பொது மன்னிப்பில் அவர்கள் விடுவிக்கப்படுவது கிடையாது.

வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு சிறைவாசி, நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தால் பரோல் விடுப்பு கிடையாது என்பதும், எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத மனிதாபிமானம் அற்ற நடவடிக்கையாகும். மேல் முறையீடு ஆண்டுக்கணக்கில் நீடித்துக்கொண்டே போகும். சிறைச்சாலை என்பது தண்டிக்கும் இடம் அல்ல. சீர்திருத்தும் இடம் என்ற கோட்பாட்டை உலகில் பல நாடுகள் ஏற்றுக்கொண்டு உள்ளன.

எனவே, சிறைவாசத்தில் திருந்திய மனிதர்களுக்கு மறுவாழ்வு அளிக்கின்ற வகையில், அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போரையும், பரோல் விடுப்பில் ஒரு சில நாள்கள் தவறியவர்களையும் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்