கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவருடன் தொடர்பிலிருந்த 175 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதில் 74 பேர் மாநில சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆவர்.
இந்நிலையில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாகக் கேரள - தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்ட சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பை மேற்கொள்ள சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் சுற்றறிக்கையின் மூலமாக உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அந்தச் சுற்றறிக்கையில், “தமிழக - கேரள எல்லையோர மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு நிபா வைரஸ் எதாவது அறிகுறிகள் இருக்கிறதா எனக் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உரிய கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். நோட் அறிகுறிகளாகக் கடுமையான தலைவலி, காய்ச்சல், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் யாரேனும் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குத் தகவல் தெரிவித்து பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வை ஒவ்வொரு மாவட்ட சுகாதார அதிகாரிகளும் எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.