சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி பெங்களூருவைச் சேர்ந்த கட்டுமானத் தொழில் நிறுவன அதிபர், காரில் கொண்டு வந்த 7.57 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடத்தை விதிகளின்படி ஒருவர், ஆவணங்களின்றி அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கொண்டு செல்ல முடியும். அதற்கு மேலான தொகை மற்றும் விலை மதிப்புள்ள சரக்குகள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும். பண நடமாட்டத்தைக் கண்காணிக்க சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மொத்தம் 33 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, 33 நிலைக்குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மார்ச் 4- ஆம் தேதி, வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாலம் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். காரை ஓட்டி வந்தவர், கர்நாடகா மாநிலம் பெங்களூரு கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் பாலசுரேஷ் (30) என்பதும், உரிய ஆவணங்களின்றி 7.57 லட்சம் ரூபாயைக் கொண்டு வந்ததும் தெரியவந்தது.
அவர், திருச்செங்கோட்டில் உள்ள ரிக் வண்டி உரிமையாளர் ஒருவருக்குக் கொடுப்பதற்காக பணத்தைக் கொண்டுவந்தது தெரியவந்தது. எனினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் இருந்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்தப் பணம், சேலம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.