திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சாண்டிலியன் என்கின்ற சரவணன். இவர் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் தரும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, வாணியம்பாடியில் உள்ள தனியார் நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் உமா மகேஷ் என்பவருக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் குறைந்த வட்டிக்கு பணம் தந்துள்ளார்.
பணத்தை வாங்கிய ஆசிரியர் உமா மகேஷ், அந்த பணத்தை கூடுதல் வட்டிக்கு பள்ளியில் பணியாற்றி வரும் சக ஆசிரியர்களுக்கு கொடுத்து வட்டி வாங்கிவந்துள்ளார். வட்டிக்கு பணம் வாங்கி கந்துவட்டி விட்டு வந்த ஆசிரியர் உமாமகேஷ், பணம் தந்தவருக்கு வட்டி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பணம் வாங்கியவர் திரும்பி இன்னும் தரல தந்ததும் தந்துவிடுகிறேன் எனச் சொல்லிவந்துள்ளார். இது பெரும் பிரச்சனையாகி கடந்த ஜனவரி மாதம் பஞ்சாயத்து நடந்துள்ளது. அந்த பஞ்சாயத்தில் அசல் தொகை 20 லட்சம் ரூபாய் மட்டும் 2021 மார்ச் மாதம் இறுதிக்குள் திருப்பி தர வேண்டும் என் பேச்சு வார்த்தையில் முடிவு செய்து முடித்துள்ளனர்.
பணம் தருவதாக ஒப்புக்கொண்டு, மார்ச் மாதம் முடிந்து 5 மாதங்கள் கடந்தும் ஆசிரியர் உமா மகேஷ் பணத்தைத் திருப்பி கொடுக்காததால் ஆகஸ்ட் 28 ஆம் தேதி பள்ளியில் வைத்து சாண்டிலியன், ஆசிரியர் உமா மகேஷிடம் பணத்தைக் குறித்து மிரட்டலாகக் கேட்டுள்ளார். அங்கே இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் உமா மகேஷ் பைனான்சியர் சாண்டிலியன் பணத்தைக் கேட்டுத் தாக்கியதாகக் கூறி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார். அதே நேரத்தில் பைனான்சியரும் ஆசிரியர் அடித்ததாகக் கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார். இரு தரப்பினரிடம் புகாரைப் பெற்ற நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.