தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகளில் தொடர்ச்சியாக வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது அரசியல் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'SNJ' மதுபான குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நந்தனத்தில் உள்ள 'SNJ' மதுபான ஆலை அலுவலகத்திலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்த மதுபான ஆலையின் உரிமையாளரான ஜெயமுருகனுக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய ‘உளியின் ஓசை’, ‘பெண் சிங்கம்’ ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர் ஜெயமுருகன் என்பது நினைவுக்கூறத்தக்கது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான வேஷ்டிகள், சேலைகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பணப்பட்டுவாடா செய்த புகாரில் அதிமுகவினர் இருவரை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகில் உள்ள, மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வி.கோட்டையூரில் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், வாக்காளர் பட்டியலுடன் வீடு வீடாகச் சென்று பணம் கொடுத்த அதிமுகவைச் சேர்ந்த சரஸ்வதி, அம்சவேணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே குள்ளம்பட்டியில் வீடு வீடாக பணம் கொடுத்த திமுகவினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த அதிமுகவைச் சேர்ந்த பழனி, சதாசிவம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.