பண மதிபிழப்பு அறிவிப்பின் மூலம் உழைக்கும் வர்க்கத்தை வங்கி வாசலில் காக்கவைத்து உழைத்து சம்பாதித்த காசுக்கே கையேந்தவைத்து வங்கிகளின் மீதான மக்கள் நம்பிக்கை கேள்விக்குறியான நிலையில் தற்போது முசிறி பகுதியில் நடைபெற்ற இந்த செயல் வங்கிகளின் மீதான மக்களின் நம்பிக்கை குலைக்கும் வகையில் இருக்கிறது.
முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் உள்ள தேசிய வங்கி கனரா வங்கியின் உள்ள வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் டெபாசிட் பணத்தை தீடிர் என காணமல் போனதை கண்டித்து வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா தும்பலம் கிராமத்தில் தேசிய வங்கியின் கிளையான கனரா வங்கி இயங்கி வருகிறது. தும்பலம், சேருகுடி, சூரம்பட்டி, கேணிப்பள்ளம், முத்தம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், அரசு ஊழியர்கள், கூலித்தொழிலாளர்கள் இந்த வங்கியில் கணக்கு உள்ளது. அண்மை காலமாகவே வாடிக்கையாளர்களின் கணக்கு இருப்பில் உள்ள பணம் அவ்வப்போது காணாமல் போவது குறித்து புகார் எழுந்த வண்ணம் இருந்தது இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் கேட்கும்போது முறையான பதில் சொல்லாமல் சமாளித்து வந்தனர். இந்நிலையில் தும்பலத்தை சேர்ந்த சித்ரா என்பவர் கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்து 35 ஆயிரமும், மணி என்பவர் கணக்கிலிருந்து ரூ.90 ஆயிரமும், சூரம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் கணக்கில் ரூ.3 லட்சத்து 25 ஆயிரமும், சண்முகம் என்பவர் கணக்கில் ரூ.50 ஆயிரமும், சிட்டிலரை சரவணன் கணக்கிலிருந்து 95 ஆயிரம் ரூபாயும், அரவன் என்பவர் கணக்கில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் என வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் பணம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதற்கான SMS வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்செயலாக வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கு புத்தகத்தை என்ட்ரி செய்து பார்த்தபோது லட்சக்கணக்கில் பணம் குறைந்துள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் கேட்டபோது அங்கிருந்த தற்காலிக ஊழியர் கருணாநிதி என்பவர் வாடிக்கையாளர்களை மிரட்டி விரட்டியிருக்கிறார். இதுகுறித்து தும்பலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பத்திரிகையாளர்களிடம் தும்பலம் வங்கியில் பணிபுரியும் தற்காலிக ஊழியர் கருணாநிதி என்பவர் வங்கியின் கம்ப்யூட்டரிலிருந்து வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து லட்சக்கணக்கான பணத்தை அவரது கணக்கிற்கு மாற்றி எடுத்துள்ளார். இதுபோல பலரின் வங்கி கணக்கிலிருந்து பணம் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இழந்துள்ள தொகை சுமார் ரூ.50 லட்சத்தை தாண்டும் என தெரிகிறது.
எனவே வங்கியின் உயர் அலுவலர்கள் விசாரணை நடத்த வேண்டும் என்றார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வங்கியை முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த வங்கி அலுவலர்களின் பதில் திருப்தியளிக்காததால் வங்கியின் எதிரே முசிறி - தா.பேட்டை ரோட்டில் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி எஸ்.ஐ. ராம்குமார் மற்றும் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னர் மீண்டும் வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்கிருந்த அலுவலர்களிடம் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாடிக்கையாளர்கள் முறையாக புகார் அளித்தால் உரிய தீர்வு காணப்படும் எனக் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கருணாநிதி என்பவர் பழைய வங்கி மேலாளர் சிவா என்பவரால் இந்த வங்கிக்குள் கொண்டுவரப்பட்டவர். அவருக்கு எடுபிடியாக இருந்தவர் அவருடன் இணைந்து தான் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டுயிருக்கிறார். வங்கி மேலாளாருக்கு எடுபிடியாகவும், இருக்கும் தற்காலிக ஊழியர் ஒருவர் எப்படி வங்கியின் கம்யூட்டரின் ரகசிய குறீயிட்டு எண்களை தெரிந்து கொண்டு பயன்படுத்த முடியும். இதற்கு பிண்ணனியில் வங்கியின் உயர் அதிகாரிகள் இருக்கலாம் என்று அந்த கிராம மக்கள் குற்றசாட்டுகிறார். சரியான முறையில் வங்கியின் சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வங்கிகளின் மீதாக இருக்கும் கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் கனரா வங்கி இழக்கும் வாய்ப்பு உள்ளது.