திருச்சி கே கே நகர், இ.சி.ஆர் சாலையில், கடந்த 31ஆம் தேதி நள்ளிரவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கேரள மாநில பதிவு எண்ணுடன் ஒரு சொகுசுக் கார் நின்றிருந்தது. அந்த கார் குறித்து விசாரணை மேற்கொண்டபோது அதன் உரிமையாளர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காமல் யாரும் காரை தேடியும் வராமல் இருந்ததால், காவல்துறையினர் அந்தக் காரை பறிமுதல் செய்து கே.கே. நகர் காவல் நிலையத்தில் கொண்டு வந்து சேர்த்தனர்.
இந்நிலையில், காருக்குள் அதன் உரிமையாளர் குறித்த ஆவணங்கள் எதுவும் இருக்குமோ என்று சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி கட்டுக்கட்டாக 11 லட்சம் ரூபாய் பணம் மட்டும் கிடைத்துள்ளது. தற்போது அந்தக் கார் மற்றும் அதில் இருந்த 11 லட்சம் ரூபாய் பணம் யாருடையது என்பது குறித்துப் பல கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து நாம் விசாரித்தபோது, கடந்த 4 நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்திற்கு பயோடீசல் கொண்டு வந்த லாரியை திருச்சி காவல்துறையினர் வாகன சோதனையின்போது தடுத்து நிறுத்தி விசாரணை செய்து வண்டியைப் பறிமுதல் செய்தனர். அதில் மேலும் 9 முதல் 11 பேர் வரை இந்த வழக்கில் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அவர்களை விடுவிப்பதற்காக அந்த லாரியின் உரிமையாளர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவரும், பயோடீசல் வியாபாரியுமான அவர் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி லஞ்சம் கொடுப்பதற்காக வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்போது திருச்சி இ.சி.ஆர். சாலையில் காரை நிறுத்தி இருந்த நிலையில், இரவு சிவில் சீருடையில் ரோந்து பணியில் வந்த காவலர்களைப் பார்த்து, விஜிலன்ஸ் பிரிவில் இருந்து அதிகாரிகள் வருவதாக நினைத்து காரில் இருந்தவர்கள் பணத்தைப் போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.க்கு லஞ்சமாகப் பணம் கொடுப்பதற்கு எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அந்தக் கார் மற்றும் அதில் வைக்கப்பட்டிருந்த பணம் யாருக்குக் கொண்டு செல்லப்பட்டது. எதற்காகக் கொண்டு செல்லப்பட்டது. என்பது குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.