சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களின் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த காலதாமதம் மாணவர்களின் எதிர்காலத்தை பெரிய அளவில் பாதிக்கும் இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என அதிமுக உடனான பாஜக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலில் அங்கம் வகித்த த.மா.காவின் இளைஞர் அணி மாநில தலைவர் ஈரோடு யுவராஜா தெரிவித்துள்ளார்.
இது பற்றி நம்மிடம் பேசிய ஈரோடு யுவராஜா, “தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் தமிழக பள்ளிக் கல்வித்துறையால் ஜூன் 20ஆம் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டன. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 11ஆம் வகுப்பிலும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிலும் சேர்ந்து வருகின்றனர். கல்லூரிகளில் சேர்க்கைக்கான அனுமதியும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான அனுமதியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், 2021-22-ம் கல்வியாண்டுக்கான மத்திய அரசின் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு 2-ம் பருவ பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாகி வருவதால் மாணவர்கள் எப்போது முடிவுகள் வரும் என்று எதிர்பார்த்து வேதனையுடன் காத்திருக்கின்றனர். எனவே மாநில வழி தேர்வில் தேர்ச்சி பெற்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிலும் சேர்க்கைக்கான அனுமதி பெற்று வரும் வேளையில் சிபிஎஸ்இ மாணவர்கள் 11ஆம் வகுப்பு சேர்க்கைக்காகவும், கல்லூரியில் சேர்வதற்கும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.
அவர்கள் இன்னும் தங்கள் தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பதால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாநில வழி கல்வியில் பயின்ற மாணவர்களே மிக அதிக அளவில் சேர்ந்துள்ளனர். சிபிஎஸ்இ மாணவர்களுக்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளன. சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் முதலில் இம்மாதம் 6ந் தேதி என்றார்கள். அடுத்து 8ந் தேதி என்றார்கள். பிறகு இரவு வரும் நாளை வரும் என கூறிக்கொண்டே இருக்கிறார்கள். இதுபற்றி சிபிஎஸ்இ சரியான முடிவுகளை உடனடியாக எடுத்து மிக விரைவாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
வரும் காலங்களில் மாநில கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும்போதே சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு முடிவுகளும் வந்தால் தான் சிபிஎஸ்இ மாணவர்களும் மாநில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களும் சிரமமின்றி பள்ளி கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை சரிசமமாக பெறுவார்கள் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். கல்வியில் மோடி அரசின் இந்த போக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்திருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தை இருளாக்கக் கூடாது” என்றார்.