ஆன்ட்ராய்டு செல்போன் நவீன உலகத்தின் வளர்ச்சி என்றாலும் அதில் அதிகமான பாதிப்பும் அதன் மூலம் ஏற்படும் தற்கொலைகளும் அதிகமாகி விட்டது. குறிப்பாக விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்கள், இளைஞர்கள் அதில் அடிமைகளாக மாறிப் போய் வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் அருண். இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடங்களாக பள்ளிக்கு செல்லாமல் செல்போனில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். பெற்றோர் எவ்வளவோ தடுக்க முயன்றும் முடியவில்லை. இதன்காரணமாக அருணின் தந்தை இவரை கோவையில் உள்ள மனநல மருத்துவமனையில் சேர்த்தி கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை கொடுத்துள்ளனர்.
பிறகு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் கடந்த மூன்று மாதங்களாக அருனை தங்கியிருக்க வைத்துள்ளார். ஆனால் பப்ஜி விளையாட்டு இல்லாமல் பித்து பிடித்தது போல அந்த இளைஞன் இருந்துள்ளான். இந்த சூழ்நிலையில் 27 ந் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்துக்கு வந்த புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினர் இறந்த அருணின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி சிறுவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.