புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தோற்று மளமளவென பரவி வருகிறது. இன்று 431 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 15,157 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,042 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 10,279 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் புதுச்சேரியில் 6 பேர், காரைக்காலில் ஒருவர் என நேற்று 7 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 260 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏவும், மக்கள் நீதி மய்யம் புதுச்சேரி மாநில தலைவருமான டாக்டர் சுப்பரமணியன் (70) கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் இன்று காலை மரணமடைந்தார்.
சுப்பரமணியம் 1985-90 ல் உருளையன்பேட்டை தொகுதியிலும், 2001-2006 மற்றும் 2006-2011 களில் முதலியார்பேட்டை தொகுதியிலும் தி.மு.க சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியவர்.
2012 முதல் 2014 வரை திமுக அமைப்பாளராக செயல்பட்டு வந்தவர். 2018-ஆம் ஆண்டு முதல் மக்கள் நீதி மய்யத்தின் மாநில தலைவராக பணியாற்றி வந்தவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.