







தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் குற்றாலம் ரிசார்ட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார்கள். 18 எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரிசார்டிலுள்ள எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு சாதகமாக அமையுமா? அல்லது பாதகமாக அமையுமா? என்கின்ற பரபரப்பு அவர்களுக்குள் நிலவியது. இதனிடையே தீர்ப்பு அவர்களுக்கு எதிராக வந்ததால் அவர்களுக்குள் ஆலோசனை நடைபெற்றது.
டிடிவி தினகரனிடமிருந்து தகவல்கள் வரும் என்று அவர்கள் காத்திருந்தார்கள். ரிசார்ட்டிற்குள் இவர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் எந்த நேரத்திலும் கிளம்புவதற்கு தயாராக இருந்தனர். இதனிடையே இன்று மதியம் சுமார் 3.15 மணி அளவில் ரிசார்டிலிருந்து எம்.எல்.ஏக்களின் வாகனங்கள் ஒவ்வொன்றாக கிளம்பி சென்றன. இந்நிலையில் கிளம்பிவந்த அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மற்றும் பூந்தமல்லி எம்.எல்.ஏ ஏழுமலை ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் பேசினார்கள்.

நாங்கள் எங்களது உரிமையை மீட்டெடுப்போமா அல்லது தேர்தலை சந்திப்போமா என்று மதுரையில் கூடி அங்கு வரும் டிடிவி தினகரனோடு ஆலோசனை செய்து முடிவெடுப்போம். சில சமூக வலைத்தளங்களில் நாங்கள் ஐந்து வருடங்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற செய்திகள் வருகின்றன. அது தவறானது நாங்கள் தேர்தலை சந்திப்போமா அல்லது மேல்முறையீட்டிற்கு செல்வோமா என்பதை மதுரையில் கூடி ஆலோசனை செய்யவுள்ளோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம் எனவே ஆலோசனைக்காக நாங்கள் மதுரை கிளம்பி செல்கிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றார்கள். குற்றால ரிசார்ட் பரபரப்பு இத்துடன் ஓய்ந்தது.