
அண்மையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இருந்த நிலையில் தற்போது தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக இன்று மாலை மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல இருக்கிறார்.
நாளை பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அண்மையில் தமிழகத்திற்கு ஒன்றிய அரசால் ஒதுக்கப்படும் கரோனா தடுப்பூசிகளின் அளவு குறைவாக உள்ளதால் மக்கள் தொகை அளவைக் கணக்கில் கொண்டு மேலும் கூடுதலாக தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என கடிதத்தின் வாயிலாக பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.