பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 6-ம் தேதி மாலை நாகர்கோவில் வந்த முதல்வர் ஸ்டாலின், நாகராஜா திடலில் நடந்த தோள் சீலை போராட்டத்தின் 200-ம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் இன்று (7-ம் தேதி) ரூ.10.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நாகர்கோவில் மாநகராட்சியின் அலுவலக கட்டிடமான கலைவாணர் அரங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் ஒழுகினாசோியில் உள்ள திமுக அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் முழு உருவ சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன்பிறகு பேசிய அவர், “நாடு முழுவதும் கலைஞரின் சிலையை திறந்து வைத்து வருகிறோம். கலைஞரின் மறைவுக்கு பிறகு முதன் முதலாக அவரால் உருவாக்கப்பட்ட அண்ணா அறிவாலயத்தில் சிலை திறக்கப்பட்டது. அதன் பிறகு கலைஞரின் குருகுலமான ஈரோட்டில் திறக்கப்பட்டது. தொடா்ந்து கலைஞரை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவின் காஞ்சிபுரத்தில் சிலை திறக்கப்பட்டது. அதன் பிறகு சேலத்திலும் இப்போது நாகர்கோவிலிலும் திறக்கபட்டுள்ளன.
கலைஞர் சிலையை திறப்பது மட்டுமல்ல, எந்த லட்சியத்துக்காக கலைஞர், அண்ணா பாடுபட்டார்களோ அந்த லட்சியத்தை மனதில் வைத்துக் கொண்டு நாம் கடமை ஆற்ற வேண்டும். நாம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாமல் இருந்தாலும் கடமையை நிறைவேற்றியிருக்கிறோம். நம்மை வாழ்த்துபவர்களும் பாராட்டுபவர்களும் தாராளமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் மற்றும் பல அமைப்பை சோ்ந்தவர்கள் நம் சாதனையை பாா்த்து பாராட்டுகிறாா்கள்.
நாட்டை பிளவுபடுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் உலவிக் கொண்டு வருகிறாா்கள். திராவிட மாடல் என்று சொல்லி தமிழக மக்கள் கவரக்கூடிய வகையில் ஒரு ஆட்சி நடக்கிறது. தொடா்ந்து இந்த ஆட்சியை விட்டால் நம் பிழைப்பு என்ன ஆவது என்று நினைக்கிறாா்கள். அதனால் இந்த ஆட்சிக்கு எப்படியாவது கெடுதல் செய்து அப்புறப்படுத்த வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறாா்கள். கலவரத்தை ஏற்படுத்தலாமா? ஜாதி மத கலவரத்தை தூண்டலாமா? என திட்டம் போட்டு கொண்டிருக்கிறாா்கள். மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்த திட்டமிட்டு அதற்கான காாியங்களில் ஈடுபட்டு இருக்கிறாா்கள். தற்போது தேவையற்ற விமா்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. அதன் மூலம் தங்களை விளம்பரப்படுத்த பிரச்சாரத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாா்கள்.
நாம் இப்போது 2024 நாடாளுமன்ற தோ்தலுக்காக காத்து இருக்கிறோம். தமிழகத்தில் சிறப்பான மதச்சாா்பற்ற கூட்டணிகளை அமைத்து நாடாளுமன்ற தோ்தல், சட்டமன்ற தோ்தல், உள்ளாட்சி மன்ற தோ்தல், இடைத்தோ்தலில் சிறப்பான வெற்றியை பெற்று நல்லதொரு மக்கள் சேவையை செய்து கொண்டிருக்கிறோம். இதை மற்றவா்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.” என்றாா்.