விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர் கண்ணன் (85). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இதன் காரணமாக இவர் அவ்வப்போது வீட்டை விட்டு மனம் போன போக்கில் செல்வது உண்டு. குடும்பத்தினர் அவ்வப்போது தேடி அழைத்து வந்து வீட்டில் வைத்திருப்பார்கள். இந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற பெரியவர் கண்ணன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்த அவரது குடும்பத்தினர் இறுதியில் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெரியவர் கண்ணனைத் தீவிரமாக தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை ராதாபுரம் அருகே உள்ள விண்ணான் என்ற ஏரியில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் போலீசார் பெரியவர் கண்ணனின் மகன்கள் வீரப்பன், ராமஜெயம் ஆகியோரை அழைத்து சென்று அடையாளம் காட்டுமாறு கூறியுள்ளனர். அப்போது அந்த எலும்புக்கூடுகளின் அருகே பெரியவர் கண்ணன் அணிந்திருந்த டவுசர் கிடந்துள்ளது.
இதையடுத்து எலும்பு கூடாக கிடந்தது மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த பெரியவர் கண்ணன் தான் என்பதை போலீசார் உறுதிசெய்தனர். இதையடுத்து விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதோடு தடய அறிவியல் துறை இணை இயக்குனர் சண்முகம் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து சிதறிக் கிடந்த எலும்பு கூடுகளை முழுமையாக சேகரித்து தடயவியல் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன முதியவர் எலும்புக்கூடாக கிடந்த சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.