திண்டுக்கல்லில் உள்ள தனியார் நடுநிலைப் பள்ளி ஒன்றில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவிகள் ஆட்டோக்களிலும், பேருந்துகளிலும், பெற்றோருடனும் பள்ளிக்குச் சென்று திரும்புவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பள்ளி துவங்கியது. மாலை பள்ளி முடிந்ததும் அனைத்து மாணவிகளும் வீட்டிற்குச் சென்று விட நான்கு மாணவிகள் மட்டும் 8 மணியாகியும் வீட்டிற்கு வரவில்லை என மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு நேரில் சென்று நிர்வாகத்திடம் தகவல் கேட்டுள்ளனர். பள்ளி நிர்வாகமும் மாணவிகள் அனைவரும் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகக் கூறினர். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து அந்த இடத்திற்கு வந்த திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் பள்ளியிலிருந்த பெற்றோரிடமும் பள்ளி நிர்வாகத்திடமும் விசாரித்தனர். இதன் பின் மாணவிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை செய்தனர். மேலும் பள்ளியின் கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மேலும், காணாமல் போன மாணவிகளின் தோழிகளிடம் விசாரித்ததில், மாணவிகளில் ஒருவருக்குப் பிறந்தநாள் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பேக்கரிகள் மற்றும் உணவகங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பள்ளிக்குச் சென்ற 8 ஆம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவிகள் பள்ளி முடிந்து நெடுநேரமாகியும் வீடு திரும்பாதது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காணாமல் போன மாணவிகள் கரூரில் மீட்கப்பட்டுள்ளனர். கரூர் போலீசார் மாணவிகளை மீட்டு திண்டுக்கல் போலீசாரிடம் ஒப்படைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.