டெல்லியில் நடந்த திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த ரியானாசூரி என்ற திருநங்கை பங்கேற்று, சிறப்புப் பரிசை பெற்றதுடன், திருநங்கையர் அழகிப் போட்டிகளுக்கான தென்னிந்தியத் தூதுவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருநங்கையரின் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் மிஸ் ட்ரான்ஸ்குயின் இந்தியா எனப்படும் திருநங்கையருக்கான அழகி போட்டி டெல்லியில் கடந்த ஏப்ரல் 4 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து 11 திருநங்கையர் கலந்து கொண்டனர்.
வாக்கிங், செல்ஃப் மேக்கப், யோகா மற்றும் தனித் திறன் இன்டர்வியூ மற்றும் அதனைத் தொடர்ந்து டேலண்ட் ரவுண்ட் மற்றும் பிகினி, தேசிய உடை மற்றும் கவுன் ஆடைகளில் அணிவகுப்பு உள்ளிட்டவை நடத்தப்பட்டு திறமைகள் அடிப்படையில் திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மும்பையைச் சேர்ந்த திருநங்கையான அர்ஷிகோஸ் மிஸ் ட்ரான்ஸ் குயின் இந்தியா பட்டத்தை தட்டிச் சென்றார். 2 மற்றும் 3 ஆவது இடங்கள் முறையே, எல்லா தேவ் வர்மா, விக்டோரியா ஆகியோர் பெற்றனர். இதில் திருச்சியைச் சேர்ந்த ரியானாசூரி என்ற திருநங்கையும் பங்கேற்று, மிஸ் டேலண்ட் அவார்ட் என்ற சிறப்பு பரிசை (பட்டத்தை) பெற்றார். மேலும் அவர் திருநங்கையர் அழகிப் போட்டிகளுக்கான தென்னிந்தியத் தூதுவராகவும் (பிராண்ட் அம்பாசிடராகவும்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த ரியானாசூரி(26) எம்எஸ்சி படித்தவர். இவர் நடனத்திலும் டிப்ளமோ படித்து, மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில், திருநங்கையருக்கான மிஸ் திருச்சி போட்டியில் முதலிடத்தைப் பெற்றவர். மேலும் கூவாகத்தில் நடந்த மிஸ் திருநங்கை போட்டியில் இரண்டாவது இடத்தையும் பிடித்தவர். அத்துடன் தற்போது, திருநங்கையருக்கான மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுத் திரும்பியுள்ளார்.