பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாகப் பேசிய நடிகை மீரா மிதுன், கடந்த 14ஆம் தேதி கேரளாவில் மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாளான 15ஆம் தேதி காலை சென்னை அழைத்துவரப்பட்டார்.
விசாரணையில் வாக்குமூலம் தர மறுத்த மீரா மிதுன், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்துவருகிறார் என கூறப்பட்ட நிலையில், அன்றே அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். மீரா மிதுனை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மீரா மிதுனை போலீசார் சிறையிலடைத்தனர். கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக யூ டியூப் நிறுவனத்திற்குப் போலீசார் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.