தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு 4000க்கும் மேற்பட்ட விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை வேலைவாய்ப்பு மையங்கள் மூலம் நிரப்பப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்திருக்கிறார்.
இந்த நியாய விலை கடை விற்பனையாளர் பணிக்கு 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியும், கட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் கூடிய விரைவில் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
இது சம்பந்தமாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் 4,403 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் கடை விற்பனையாளருக்கு ரூ 8,500 சம்பளம், எடையாளருக்கு 6,500 சம்பளம் தொகுப்பு ஊதியம் மூலம் வழங்கப்பட உள்ளது. இட ஒதுக்கீட்டின் பேரிலும், சமூக நீதி அடிப்படையிலும் சமமாக எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண், நேர்முகத் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண் ஆகிய இரண்டையும் சேர்த்து யார் அதிகளவு மதிப்பெண் வாங்குகிறார்களோ அவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் எந்த தவறும் நடப்பதற்கு வழியில்லை. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளது. அரசியல் தலையீடு இருக்காது. எந்த ஐயப்பாட்டிற்கும் இடம் இல்லாமல் வெளிப்படைத் தன்மையோடு, எந்த புகாருக்கும் இடம் இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படும். தேர்வு எப்படி நடத்துவது என சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வில் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாசுக்கு எந்த ஐயப்பாடும் தேவையில்லை. அரசியல் தலையீடு இல்லாமல் நேர்மையான முறையில் தேர்வு நடை பெற இருக்கிறது” என்று கூறினார்.
“தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிகளுக்கு 4,000 பேரை நியமிக்க தமிழக அரசின் கூட்டுறவுத் துறை முடிவு செய்திருக்கிறது. இந்த பணியிடங்கள் அனைத்தும் மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் என்ற அமைப்பின் மூலம் மாவட்ட அளவில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது, இந்த நியமனங்கள் சரியாக நடக்குமா? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.