பெரம்பலூர் மாவட்டம், மலை அடிவாரத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண், பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த 17 வயதான இன்னொரு மாணவி, அவரும் பெரம்பலூர் நகரில் உள்ள வேறு ஒரு நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இருவரும் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்து வந்த மிகவும் நெருங்கிய தோழிகள். அதேபோன்று ஊரில் இருந்து கல்லூரிக்கு செல்லும் போதும் இருவரும் சேர்ந்தே செல்வார்கள். பெரம்பலூர் சென்ற பிறகு அவரவர் கல்லூரிக்கு செல்வது கல்லூரி முடிந்து ஊருக்கு திரும்பும் போதும் இருவரும் சேர்ந்து வருவதுமாக நட்புடன் பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 5ம் தேதி காலை 8 மணிக்கு கல்லூரிக்கு சென்று வருவதாக அவரவர் வீட்டில் கூறிய தோழிகள் இருவரும் அன்று மாலை வீட்டுக்கு வந்து சேரவில்லை. கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற இரு மாணவிகளும் மாயமானார்கள். மாணவிகள் இருவரும் வீட்டுக்கு வராதது கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள், பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் பேரில் போலீசார் மாணவிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில் இரண்டு மாணவிகளில் ஒரு மாணவி ஆண்களுக்குரிய தன்மையுடன் மாறி வருவதாக கூறி உள்ளனர். மேலும் அந்த மாணவி ஆண்களைப் போல தலைமுடியை வெட்டிக் கொள்வதும், ஆண்களைப் போலவே கோட் சூட் உட்பட உடைகள் அணிவதுமாக இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது. ஆணாக மாற விரும்பும் பெண்ணும் அவரது தோழியும் சேர்ந்து சென்னை சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை பெண் போலீசார் அவர்களை தேடி சென்னைக்கு சென்றனர். போரூர் பகுதியில் ஒருவரது வீட்டில் இரு தோழிகளும் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களை கண்டுபிடித்த பெண் போலீசார் இரண்டு மாணவிகளையும் அங்கேயே விசாரித்தபோது ஆணாக மாறி வரும் மாணவி, பெண் தன்மையுடன் உள்ள தோழியுடன் ஒன்றாக சேர்ந்து குடும்ப வாழ்க்கை நடத்த முடிவு செய்ததாகவும், இதை வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் மேலும் ஆணாக முழுமையாக மாறுவதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் இருவரும் யாரிடமும் சொல்லாமல் சென்னை புறப்பட்டு வந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் போலீசார், இரு மாணவிகளிடமும் பேசி அவர்களை பெரம்பலூர் அழைத்து வந்தனர். தற்போது அந்த இரு மாணவிகளுக்கும் சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலிங் கொடுத்து வருகிறார்கள்.