தடை செய்யப்பட்ட பட்டாசுகளைத் தயாரிக்கவோ, விற்கவோ, வாங்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாகச் செயல்படுத்தும் வகையில் பேரியம் நைட்ரேட் கலந்த பட்டாசுகளுக்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்படுவதாகத் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளைச் சேமித்து வைக்கவும், கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். சரவெடி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகளைப் பொதுமக்கள் வெடிக்கக் கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரசாயனம் கலந்த பட்டாசுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், பட்டாசுக் கடைகளில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்து வருகிறார். சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடைகளில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்து வருகிறார். அதேபோல் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசுக் கடைகளில் தடை செய்யப்பட்ட சரவெடி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிவகாசியில் தடை செய்யப்பட்டிருந்த பட்டாசுகளை வைத்திருந்த சில கடைகளுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்துள்ளனர்.