கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைமையிலான அரசு, கரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தது. அதில், முதல் தவணையாக 2,000 ரூபாய் மே மாதத்திலேயே வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் தவணை 2,000 ரூபாய்க்கான டோக்கன், கடந்த 11.06.2021 தேதிமுதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டது.
14ஆம் தேதிவரை 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பைப் பெறுவதற்கான டோக்கனும் வழங்கப்பட்ட நிலையில், இன்றுமுதல் (ஜூன் 15) அரிசி அட்டைதாரர்கள் 2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்புகளை டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் சென்று ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாமிப்பிள்ளை தெரு பெரியமேடு கூட்டுறவு அங்காடி, பெரியமேடு பகுதியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ. பரந்தாமன் ஆகியோர் இணைந்து துவங்கிவைத்தனர்.