Skip to main content

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்; அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

Published on 07/10/2024 | Edited on 07/10/2024
Ministerial talks with samsung labor issue

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 1500க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 8 மணிநேர வேலை, ஊதிய உயர்வு வழங்க வேண்டும், தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும், போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  20 நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர  பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தனர். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தைகள் எதிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிவடைந்தன. அதே சமயம் சாம்சங் ஆலை தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக விரைந்து தீர்வு காணத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அதில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, சி.வி. கணேசன் ஆகியோர் இணைந்து இந்த பிரச்சனையில் சுமுக தீர்வு காண முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேற்று முன்தினம் (05.10.2024) முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சாம்சங் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, சி.வி. கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று (07.10.2024) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்