ரோந்து சென்ற போலீஸ் எஸ்ஐயை தாக்கிய ரவுடிகளை, அமைச்சர் மணிகண்டன் மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் பிரபல ரவுடிகளான கொக்கிகுமார், விக்னேஷ். இவர்கள் இருவர் மீதும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 3ம் தேதி இவர்கள் இருவரும் சாலையோரம் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த எஸ்ஐ தினேஷ், ‘இங்கு நிற்க கூடாது. பொது இடத்தில் வைத்து மது அருந்தக்கூடாது’ என அறிவுரை கூறியுள்ளார். இதில் போதையில் இருந்த ரவுடிகள் கோபமடைந்துள்ளனர். தொடர்ந்து அறிவுரை கூறிய எஸ்ஐயை தரக்குறைவான வார்த்தைகளால் ரவுடிகள் திட்டியுள்ளனர். மேலும் எஸ்ஐயின் கையில் கடித்து விட்டு, கல்லை தூக்கி அவர் மீது வீசி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
அப்போது போலீசார் இருவரையும் பின்னால் துரத்தி சென்றுள்ளனர். அதில் விக்னேசுக்கு கைகளிலும், கொக்கி குமாருக்கு வலது காலிலும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கைதானவர்களில் ஒருவரான விக்னேஷின் தந்தை செல்வராஜ், எம்எஸ்கே நகர் அதிமுக கிளைச்செயலாளராக உள்ளார். இதனால் இருவரையும் அமைச்சர் மணிகண்டன் கடந்த 10ம் தேதி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் படம் பிடித்து வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவளைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து அமைச்சர் மணிகண்டன் கூறுகையில், அவர்களைப் பார்த்ததில் ஏதும் தவறில்லையே என தெனாவட்டாக கூறியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.