கடலூர் மாவட்டம், மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது கழுதூர் கிராமம். இந்த கிராமத்தில், கடந்த 2006- 2011 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டி திறக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சமத்துவபுரங்கள் குறித்து கண்டுகொள்ளவில்லை. இதனால் சமத்துவபுர வீடுகள் பழுதடைந்து இருந்தன. இந்த வீடுகளை சீரமைப்பு பணிகள் செய்து தருமாறு சமத்துவபுரத்தில் குடியிருக்கும் மக்கள் தொகுதி அமைச்சர் சி.வி.கணேசனிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், கழுதூர் சமத்துவபுரம் வீடுகள் சீர்படுத்துவதற்காக, ஒரு கோடியே 57 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார். நேற்று (30/04/2022) காலை திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சி.வி.கணேசன், சமத்துவபுர வீடுகளை ஆய்வு செய்து, பழுது நீக்கம் மற்றும் புதுப்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டி, அங்கு குடியிருக்கும் பயனாளிகளிடம் அதற்கான உத்தரவை வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், "முன்னாள் முதலமைச்சர் கலைஞர், ஆட்சியில் கழுதூர் ஊராட்சியில் சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. இந்த சமத்துவபுரத்தில் சமுதாய பாகுபாடின்றி அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும், சகோதர மனப்பான்மையுடன் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின், சமத்துவபுரத்தில் பழுதடைந்த வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார்.
அவருக்கு நாம் அனைவரும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். இது ஒரு சிறப்பான நிகழ்வு இன்னும் இரண்டு மாதங்களில் சமத்துவபுரத்தில் உள்ள அனைத்து வீடுகளையும் பழுது நீக்கி பணிகள் முடிக்கப்பட்டு குடிநீர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரப்படும் என்று உறுதிக் கூறுகிறேன்." இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.