பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை நியாய விலைக் கடைகள் மூலம் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று திடீரென தென்சென்னை சைதை பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது துணிப்பை மூலம் வைக்கப்பட்டிருந்த பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்களை ஒவ்வென்றாக எடுத்து பார்த்து ஆய்வு செய்து விட்டு பொதுமக்களுக்கு அந்தப் பொருட்களை கரும்புடன் வழங்கினார். மேலும், பொதுமக்களிடம் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் தரம் குறித்து கேட்டார்.
அதற்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களோ, " முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த உடனே கரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாயும் கொடுத்து, 14 நிவாரணப் பொருட்களையும் தரமாக கொடுத்தீர்கள், அதுபோல் நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு தரமாக முதலமைச்சர் கொடுத்திருக்கிறார். அதற்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறினார்கள்.