கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் பிறகு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி, கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேபோல், கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவருவதால், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று (01.11.2021) திறக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளிக்கு வரும் மாணவர்களை, “விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப்போல வரவேற்பு கொடுங்கள்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அந்தவகையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் அரசுப் பள்ளிக்கு வந்த மாணவர்களை உயர் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.