திமுக கூட்டணி சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளராக போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்து திருச்சி திருவானைக்காவல், காட்டூர் ஆகிய இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- இந்த தேர்தலில் நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு வைக்கும் வேட்டாக அமையும். கடந்த தேர்தலில் 4 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்து எம்.பி ஆக்கினீர்கள். வரும் தேர்தலில் துரை வைகோவை 5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதுபோல் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தால், மாதம் இரண்டு முறை திருச்சி தொகுதிக்கு வந்து உங்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உங்கள் எம்பியுடன், அமைச்சருடன் சேர்ந்து நடவடிக்கை எடுப்பேன். நான் கலைஞரின் பேரன் சொன்னதை செய்வேன்.
நீங்களும் கொள்கை பேரன்கள் தான், லட்சிய பேரன்கள் தான். நாம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் நமது லட்சியம். அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக திருச்சி அமைய வேண்டும். திருவரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட மணப்பாறையில் 200 கோடி மதிப்பில் சிப்காட் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு கோடி ரூபாய் செலவில் காவிரி பாலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நல்லூர் ஒன்றியத்தில் 3 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் 20 கோடி ரூபாய் செலவில் 42 சாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளது. 105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி புதிய பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.11 கோடி ரூபாய் செலவில் திருவரங்கம் பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
கடந்த 2021 ல் ஸ்டாலின் முதல்வரான பின், கட்டணமில்லா பேருந்து வசதி, மகளிர் உரிமை திட்டம், புதுமைப் பெண் திட்டம் பெண்கள் உரிமைக்காக போராடியவர் பெரியார். பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தவர் அண்ணா. கலைஞர் ஆகியோர் வழியில் முதல்வரான ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்து பெண்கள் உயர் கல்வி படிக்க கல்வி உதவித் தொகை செய்துள்ளார். திட்டத்தில் தமிழக முழுவதும் மூன்று லட்சம் மாணவியரும் திருச்சியில் மட்டும் பத்தாயிரம் மாணவியரும் பயன்பெற்றுள்ளனர். அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்காகவும் மாதம் ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
முதல்வர் கொண்டு வந்த காலை உணவு திட்டத்தையும் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி கனடா நாட்டிலும் செயல்படுத்தி உள்ளனர். இதில் தினம் 68 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஒரு கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்தனர் அதில் 10% பேருக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை. உண்மை தொகை கிடைக்காத மகளிருக்கு ஐந்து ஆறு மாதங்களில் உரிமை தொகை கிடைக்கும். இந்தியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் காஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெட்ரோல் 75 ரூபாய்க்கு வழங்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர். அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இந்தியாவில் 10 ஆண்டுகளாக பிரதமராக ஆட்சி செய்தவர் கருப்பு பணத்தை ஒழித்து 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வதாக கூறினார் செய்யவில்லை. பிரதமர் மோடி வாயால் வடை சுட்டு அவரே சாப்பிட்டு விடுவார். தமிழகத்துக்கு ஒரு திட்டத்தை கூட அவர் செயல்படுத்தவில்லை.
கடந்த 2019 ஜனவரி மாதம் தேர்தலின் போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்படும் என்று ஒரு கல்லை மட்டும் நட்டு வைத்துவிட்டு சென்றனர். அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் ஐந்து மாநிலங்களில் .மத்திய அரசு நிதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடித்து விட்டனர். கலைஞர் பெயரில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுவேன் என்று வாக்குறுதி கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின் பத்து மாதங்களில் கட்டி முடித்துள்ளார். அடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் தமிழகம் வருகிறாராம். இன்னும் 15 நாட்கள் என்னதான் தமிழகத்தை சுற்றி வந்தாலும், இங்கேயே குடியிருந்தாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது. பிரதமர் பெயரை சொல்லி கூப்பிட வேண்டாம், . நாம் செலுத்தும் ஒரு ரூபாய் வரிக்கு இருபத்தி ஒன்பது பைசா மட்டும் திருப்பி தருவதால், 29 பைசா என்றே குறிப்பிடுங்கள்.
நாம் செலுத்தும் வரிப்பணத்தை பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு வாரி வாரி கொடுக்கிறார். அதே சமயம் தமிழகத்தில் புயல் உள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பைசா கூட நிவாரணம் கொடுக்கவில்லை. இப்படித்தான் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், முதல்வர்களையும் அமைச்சர்களையும் அடிமைகளாக்கி வைத்திருந்தனர். நாம் அப்படி அடிமைகள் ஆகி விடுவோமா?அவருக்கு பயப்படுவோமா? பயப்பட மாட்டோம். அந்த 29 பைசாவை விரட்டி அடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.