நீட் தேர்வுக்கு எதிராக ஆகஸ்ட் 20 ஆம் தேதி உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதனிடையே திமுக வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்று கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை திமுக ஏமாற்றிவிட்டதாக அதிமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, “எந்தவிதமான விமர்சனங்களைப் பற்றியும் கவலையில்லை. எங்களுக்கு நீட் தேர்வை ஒழிக்க வேண்டும்; மாணவர்களின் பக்கம் துணை நிற்போம். மாணவர்களின் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. நீட் தேர்வுக்காக முன்பெல்லாம் மாணவர்களைத்தான் பலி கொடுத்துக்கொண்டிருந்தோம். ஆனால், தற்போது அவர்களது குடும்பத்தினரைப் பலிகொடுத்துக்கொண்டிருக்கிறோம். அதற்காக எந்த கேலி, கிண்டல் வந்தாலும் கவலைப்படப்போவதில்லை; உணர்வுப்பூர்வமாக இந்த போராட்டத்தை நடத்துவோம். நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்; அதேபோன்று ஒரு உதயநிதி மட்டும் அதனைச் செய்ய முடியாது மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீட் தேர்வு தொடர்பாகக் கொடுத்த வாக்குறுதியைக் கண்டிப்பாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்; அதிமுக போன்று மக்கலை ஏமாற்றமாட்டேன்” எனத் தெரிவித்தார்.