சென்னையில் நடைபெற்ற தேசிய கைத்தறி கண்காட்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
நிகழ்வில் பேசிய அவர், “அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் அவர்களின் துறை சார்ந்த மானியக் கோரிக்கையின் போது கைகளில் சிறு காகிதம் கூட இல்லாமல் 30 நிமிடங்கள் பேசுவார்கள். ஆனால், நாங்கள் ஆவலாகக் காத்திருப்பது அமைச்சர் காந்தியின் மானியக் கோரிக்கைதான். அந்த அளவிற்கு நகைச்சுவையாகவும் சொல்ல வேண்டிய விஷயத்தை தெளிவாகவும் சொல்லுவார்.
அவருடைய மானியக் கோரிக்கையின் போது நானும் மகேஷும் முதலிலேயே சினிமாவில் முதல் காட்சியில் அமருவது போல் அமருவோம். இப்பொழுது கூட அவரிடம் நீங்கள் எப்பொழுது பேசப்போகிறீர்கள் எனக் கேட்டேன். நானும் நீயும் ஒரே நாள் தான் என்றார்.
அமைச்சர் பேசும்போது, ‘சேகர்பாபு 4800 கோடி சொத்து...’ எனச் சொல்லி நிறுத்திவிட்டார். அதை முடிக்க வேண்டும். இப்படித்தான் அங்கேயும் பேசுவார். 4800 கோடி ரூபாய் சொத்தும் அவர் வைத்துக்கொள்ளவில்லை. அறநிலையத்துறைக்கு அந்த சொத்துகளை மீட்டெடுத்துள்ளார். சில ஊடகங்கள் அதை வெட்டி ஒட்டி வெளியிட்டு விடுவார்கள். நான் அனைத்து ஊடகங்களையும் சொல்லவில்லை” எனக் கூறினார். இவ்வாறு அமைச்சர் உதயநிதி கலகலவென பேச விழா மேடை சிரிப்பலையில் ஆழ்ந்தது.