Skip to main content

“மத்திய நிதியமைச்சர் அடிப்படை கூட தெரியாமல் பேசுகிறார்” - அமைச்சர் சேகர்பாபு

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Minister Sekar Babu's reply to Union Justice Minister Nirmala Sitharaman

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறுகிறது. சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.

இதனிடையே ராமர் கோவில் திறப்பு விழாவை நாட்டு மக்கள் கண்டுகளிக்கும் வகையில், கோவில்கள் உள்ளிட்ட இடங்களில் எல்.இ.டி திரை மூலம் நேரலை செய்யப்பட்டது. இந்த நேரலை நிகழ்வுக்காக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் எல்.இ.டி திரை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இது உரிய அனுமதி வாங்கவில்லை என்று கூறி காவல்துறையினர் எல்.இ.டி திரையை அகற்றினர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக அரசு இந்து விரோத செயலை செய்து வருகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “தமிழகத்தில் அனைத்து திருக்கோவில்களிலும் சுதந்திரமாக வழிபாட்டு முறைகள் நடைபெறுகின்றன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசியல் கண்ணோட்டத்தால் மட்டுமே இதனை அணுகுகிறார். நேற்று ஏரிக்காத்த ராமர் கோவிலுக்கு சென்ற நிர்மலா சீதாராமன், அங்கு 25 லட்சம் ரூபாயில் உபயதாரரின் சார்பில் பணிகள் நடைபெற்றிருக்கிறது. அதனைப் பார்த்துவிட்டு இங்கு என்ன பணிகள் நடைபெறுகிறது என்று நிர்மலா சீதாராமன் கேட்க, அதற்கு உபயதாரரும், கோவில் நிர்வாகிகளும் பணிகள் குறித்து முழுவதும் விளக்கமாக கூறியுள்ளனர். அதனை கேட்டுவிட்டு கோவில் பணிகள் உபயதாரரின் மூலம் நடைபெறுகிறது என்றால் உண்டியலில் விழும் பணம் எங்கே எடுத்து செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

கோவிலில் உபயதாரர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய பிறகு கோவிலுக்காக நேர்த்திக்கடன் செய்ய வருவார்கள். அப்படி வருபவர்களை வேண்டாம் என்று சொல்லவா முடியும். எந்த காலத்திலும் அதுபோன்று திருப்பணிகள் நடைபெற்றதே இல்லை. திருக்கோவில் பணிகள் குறித்து அடிப்படை கூட தெரியாமல் பேசுகிறார் மத்திய அமைச்சர்.

இன்று காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் ராம பஜனை நடப்பதற்கு தடை விதித்ததாக கூறினார்கள். அப்படி எந்த தடையும் தமிழக அரசு விதிக்கவில்லை. கோபாலபுரத்தில் கலைஞர் வீட்டுக்கு அருகே உள்ள ராமர் கோவிலில் கூட இன்று எல்.இ.டி திரை அமைத்து ராமர் கோவில் திறப்பு விழா நேரலை செய்யப்பட்டது. நாங்கள் எந்த வித தடையும் விதிக்கவில்லை. திருக்கோவில்களில் அன்னதானம், எல்.இ.டி திரை போடுவதற்கு நாங்கள் எப்போதும் தடை விதித்தே இல்லை. ஆனால் முறையாக அனுமதி வாங்கிவிட்டு அதனை செய்ய வேண்டும். ஆன்மீகத்தை ஆன்மீகமாக பார்க்கும்போது நாங்கள் எந்த வித தடையும் விதிக்கவில்லை; ஆன்மீகத்தை அரசியலாக்கும் போதுதான் சட்டத்திற்கு உட்பட்டு இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றார்.

சார்ந்த செய்திகள்