ஜெயலலிதாவின் 72- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வத்திராயிருப்பு அருகே டபிள்யு. புதுப்பட்டியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியபோது,
“ஜெயலலிதாவின் திட்டங்களான விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குதல், மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல், கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை மற்றும் மகப்பேறு நிதியுதவி திட்டங்களால் பொதுமக்களின் ஒட்டுமொத்த ஆதரவினையும் அதிமுக பெற்றிருக்கிறது. அதிமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களில் ஏதாவது ஒன்றையாவது ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்று பயன் அடைந்து இருப்பார்கள். ஜெயலலிதாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி நடத்தி வருகிறார். ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி நல்லாட்சி நடத்தி வருகிறார். ஜெயலலிதாவி்ன் கனவுத் திட்டமான மகளிருக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம் ரூ.25,000 மானியத்துடன் அம்மாவின் வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் வழங்கப்படுகிறது.
ஆயிரம் ரூபாயுடன் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கிய எடப்பாடியார் நல்லாட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் எப்போது தேர்தல் வந்தாலும் வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்திய துணைக் கண்டத்திலேயே நாட்டு மக்களுக்காக தாலிக்கு தங்கம், மடிக்கணினிகள் என காலத்தால் அழிக்க முடியாத பல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலலிதா. தமிழகத்தில் அதிமுகவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுக பல்வேறு போராட்டங்களையும் கலவரங்களையும் தூண்டி விட்டு வருகின்றது.
எந்தக் காலத்திலும் மதக்கலவரம், சாதிக்கலவரங்களை அதிமுக அரசு அனுமதிக்காது இந்த டபிள்யு புதுப்பட்டி அதிமுகவின் கோட்டை. நாங்கள் திட்டடங்களை நிறைவேற்றி விட்டு தான் உங்களிடம் ஓட்டு கேட்டு வருகின்றோம். பணத்திற்காக யாரும் தற்போது ஓட்டு போடுவது கிடையாது. நல்ல மனிதர்களை பார்த்துத்தான் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். நாங்கள் நல்ல வேட்பாளர்களை தான் தேர்தலில் நிறுத்துவோம். வத்திராயிருப்பு ஒன்றியம் கொடிக்குளம் பேரூராட்சி, சுந்தரபாண்டியன் பேரூராட்சி, புதுபட்டி பேரூராட்சி அனைத்து பகுதிகளுக்கும் தாமிரபரணி குடிநீர் வழங்கியது அதிமுக அரசுதான், படுமோசமாக இருந்த சாலைகளை புதிதாக நாங்கள்தான் போட்டு கொடுத்துள்ளோம் விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 300 கோடி ரூபாயில் அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் எடப்பாடியார் பெற்றுக் கொடுத்துள்ளார்.
உலக அரசியலை டபிள்யு. புதுப்பட்டி கிராம மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். மக்கள் ஆதரவு பெற்ற இயக்கம் என்று சொன்னால் அது அதிமுகதான். பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு பிரச்சனைகளை இந்த அரசு தொடர்ந்து எதிர்கொண்டுதான் வருகின்றது. ஆனாலும் மக்கள் பணியாற்றுவதில் அதிமுக அரசு ஒருக்காலும் பின்வாங்காது. எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுகவுக்கு நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும்.” என்றார். ஓட்டுக்கு பணம் தந்தெல்லாம் வாக்காளர்களை விலைக்கு வாங்க முடியாது என்பதை உள்ளாட்சி தேர்தல் கற்றுத் தந்த அனுபவப் பாடத்தாலோ என்னவோ,‘உண்மை’பேசியிருக்கிறார், கே.டி.ராஜேந்திரபாலாஜி!