தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்திலும், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாவட்டம் முழுவதும் சென்று, அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார். கரோனா தடுப்புப் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வும் செய்து வருகிறார். மேலும், மாவட்டம் முழுவதும், அரசு மற்றும் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அரசு நிகழ்ச்சிகள், பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
‘அமைச்சராக இருப்பதும், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும், ரொம்பவே ரிஸ்க்தான்’ என்பது, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின்துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு போன்றவர்களுக்கு, கரோனா தொற்று உறுதியாகி, சிகிச்சை பெற்று வருவதில் நிரூபணமாகியுள்ளது.
’அந்தப் பயம் இருக்கணும்..’என்று சினிமாவில் நடிகர் விஜய் சொல்வதுபோல், கரோனா பயமானது, பொதுமக்கள் பலரையும் போலவே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வரை ஆட்டிப்படைக்கிறது. அதனால், முதலமைச்சர் வழியில், கே.டி.ராஜேந்திரபாலாஜியும் சென்னையில் கரோனா பரிசோதனைக்கு, தன்னை உட்படுத்தியிருக்கிறார். பரிசோதனை முடிவில் ‘நெகடிவ்’ என வந்து, கரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.