Skip to main content

மனு கொடுக்க வந்த நரிக்குறவருக்கு சால்வை அணிவித்து கோரிக்கையை கேட்ட அமைச்சர்

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

The minister put a shawl on the  who came to give the petition and heard the request

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மகளிர் மேல்நிலைப் பள்ளி, மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளி, கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

 

கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மெய்யநாதன் மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசும் போது, ''கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 23 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறினார்கள். அனைவரையும் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டிலேயே மிகச் சிறந்த அரசுப் பள்ளிகளில் ஒன்று கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப் பள்ளி என்று கூறலாம். அனைவரும் மருத்துவராக வேண்டும் என்பதில்லை ஆனால் கல்வியால் மட்டுமே நல்ல மனிதர்களாக முடியும். மேலும் நல்லா படிக்கிற மாணவ, மாணவிகளை மட்டுமே தொடர்ந்து கவனித்து வருகிறோம். இந்த பாகுபாடு மாறி அனைவரையும் சமமாக கவனித்துக் கற்பிக்க வேண்டும்.

 

இந்த இலவச சைக்கிள் கொடுப்பது நீங்கள் பள்ளிக்கு வருவதற்காக மட்டுமல்ல உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் கவனத்தில் கொண்டே வழங்கப்படுகிறது. எரிபொருள் மூலம் இயங்கும் கார், பைக் போன்ற அனைத்து வாகனங்களாலும் புகை வெளியேறி சுற்றுச்சூழல் மாசுபடும் ஆனால் சைக்கிள்களால் எந்த பாதிப்பும் வராது. உடல் ஆரோக்கியம் பெறும்.

 

இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர் பதவிகளில் பெண்கள் இருக்கிறார்கள் என்பது பெருமையாக உள்ளது. இதற்கு காரணம் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரும்தான். அந்த வழியில் வந்த நமது முதலமைச்சரின் நடவடிக்கைகளுமே. தற்போது பள்ளிக் கல்விக்காக மட்டும் ரூ.36 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார். அதேபோல நமது பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்றுள்ளார். ஒரு நாளைக்கு ஆயிரத்து 200 கி.மீ பயணம் செய்து பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறார் என்றார்.

 

கீரமங்கலம் அறிவொளி நகர் நரிக்குறவர் காலனியில் பள்ளி செல்லா குழந்தைகளை கல்வி அதிகாரிகள் இன்று பள்ளிக்கு அழைத்து வந்து சேர்த்துள்ளனர். அந்த அதிகாரிகளை பாராட்டுகிறேன். மேலும் அறிவொளி நகர் நரிக்குறவர் காலனி மக்கள் தங்களுக்கான சாதிச்சான்றிதழ் எஸ்.டி என தர வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனு உடனடியாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

 

The minister put a shawl on the  who came to give the petition and heard the request

 

மேலும் கோரிக்கை மனு கொடுக்க வந்த நரிக்குறவர் காலனியை சேர்ந்தவருக்கு சால்வை அணிவித்து அவரது கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன், ஏபிஓ தங்கமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்