கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வீராணம் ஏரி கரையில் உள்ள பூதங்குடி கிராமத்திலிருந்து வாழைக்கொல்லை கிராமம் வரை 4.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 3 கோடி செலவில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையின் தரத்தைத் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று (15/04/2022) நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் வாழைக்கொல்லை கிராமத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள பின்னர் சாலையின் தரம் குறித்து, இயந்திரத்தால் துளையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, ராதாமதகு வாய்க்கால் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ வேலு, "கடலூர் மாவட்டத்திற்கு சாலை விரிவாக்கப் பணிக்காக ரூபாய் 195 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தமிழக வேளாண்துறை அமைச்சர் முயற்சி தான். பெண்ணாடம்- திட்டக்குடிக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கடலூரிலிருந்து மடப்பட்டு வரை சுமார் 37 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலைகள் விரிவுபடுத்தும்போது சாலையின் ஓரத்தில் உள்ள பசுமை மரங்கள் வெட்டப்படுகிறது. அதனால் 10 ஆயிரம் புதிய மரங்கள் நடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் மரங்கள் வைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுகிற மாவட்டம். இதில் 22 இடத்தில் கல்வெட்டுப் பாலம் அமைக்கப்பட்டால், வெள்ளபாதிப்பு இருக்காது. அதனைக் கணக்கில் எடுத்துக் கல்வெட்டுகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
வீராணம் ஏரிகரை சாலை தற்போது 7 மீட்டர் சாலையாக உள்ளது. இதனை அகலப்படுத்த வேண்டும் என்று வேளாண்துறை அமைச்சர் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பிளர் சிந்தனைச்செல்வன் ஆகியோர் வலியுறுத்தி வருகிறார்கள். இதனை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வீராணம் ஏரியின் கீழகரைப் பகுதியான கந்தகுமரனிலிருந்து மேலகரை பகுதி சோழதரம் வரை ஏரியின் உள்ளே பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிக தொகை வேண்டும் என்பதால், ஒன்றிய அமைச்சரைச் சந்தித்து, இதற்கான ஒன்றிய நிதியை பெற்று பாலம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, காட்டுமன்னார்கோவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.