“வைகை அணையிலிருந்து ரூ.585 கோடி மதிப்பில் குடிதண்ணீர் கொண்டுவரப்பட்டு ஆத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படும்” என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 46 கிராம ஊராட்சிகளிலும் மே தின சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 22 கிராம ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் கண்காணிப்பில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சீவல்சரகு ஊராட்சிக்கு உட்பட்ட அகரத்தம்மன் கோவில் முன்பு நடைபெற்றது. சிறப்பு கிராமசபை கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முனைவர் ச.விசாகன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரெங்கராஜன், ஒன்றிய பெருந் தலைவர் மகேஸ்வரி முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஒன்றிய செயலாளர் முருகேசன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சிமன்ற தலைவர் ராணி ராஜேந்திரன் வரவேற்றுப் பேசினார்.
இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “இந்த இடத்தில் ஆத்தூர் தொகுதியின் மாபெரும் விளையாட்டு மைதானம் அமைய உள்ளது. இளைஞர்கள் அதிக அளவில் வந்து செல்லவேண்டிய இடம் என்பதால் உடனடியாக அந்த மதுபானக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன். ஜெ.புதுக்கோட்டை நெசவாளர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு சாலை வசதி, தெருவிளக்கு வசதி வேண்டுமென கூறினீர்கள். உங்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என கடந்த திமுக ஆட்சியின் போது 13 ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கோட்டை பேரணையிலிருந்து குடிதண்ணீர் கொண்டுவரப்பட்டு சின்னாளபட்டி மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் விநியோகம் செய்யப்பட்டது.
அதன்பின்னர் காவிரி கூட்டுக்குடிநீர் கொண்டு வரப் பட்டது. தற்போது மக்களின் தேவைக்கேற்ப ரூ.585 கோடி மதிப்பில் வைகை அணையிலிருந்து குழாய்கள் மூலம் குடிதண்ணீர் கொண்டு வரப்பட்டு வழியோர கிராமங்களான நிலக்கோட்டை, ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தங்குதடையின்றி குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக முதல்வர் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளது. ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள பொதுமக்களுக்கு காமராஜர் நீர்; தேக்க குடிதண்ணீர், காவிரி கூட்டுக்குடிநீர்; கிடைத்து வரும் நிலையில் தற்போது வைகை அணையிலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீரும் கிடைக்கப்போகிறது. கடந்த ஒருவாரத்திற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலகத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்தேன் இப்போது இந்த கிராமசபை கூட்டத்தின் மூலம் பொதுமக்களின் கோரிக்கையையும் கேட்டறிந்துள்ளேன். விரைவில் அனைத்தும் நிறைவேற்றிக் கொடுக்கட்டும்” என்று கூறினார்.