"தமிழக இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலையை மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசும் செய்து வருவது வேதனையாக உள்ளது" என திருவாரூரில் திருச்சி சிவா கூறியுள்ளார். திருவாரூரில் தனியார் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவா கலந்துக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது "நடிகர் விஜய் அவர் விருப்பப்பட்ட தனக்கு தோன்றிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ரயில்வே துறையில் மட்டுமல்ல, தமிழக அரசுக்கு கீழ் வரக்கூடிய மின்சாரத்துறையில் கூட வட மாநிலத்திற்கு இடமுண்டு என்ற நிலைமையை அதிமுக அரசு ஏற்படுத்தியுள்ளது. இப்படி தமிழக இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலையை மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு செய்வது விந்தையாக உள்ளது.
இந்தியாவில் உள்ள எந்த மொழியும் பொது மொழியாக வரமுடியாது. ஒற்றை மொழியை ஏற்க மற்றவர்கள் மறுப்பார்கள். உலகின் தொன்மை மொழி தமிழ் மொழி அதை வடக்கே உள்ளவர்கள் ஏற்பார்களா? மாட்டார்கள். தமிழ் மொழிக்கு தகுதி இருந்தும், பொது மொழியாக ஏற்க மறுக்கிறார்கள், எழுத்து வடிவம் கூட இல்லாத இந்தி மொழியை எங்களாலும் ஏற்க இயலாது" என கூறினார்.