திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் சொந்த ஊரான வத்தலக்குண்டுவில் திமுக தொண்டர் ஒருவருக்கு பேரூராட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் பதவிக்கு உறவினர்கள், சிபாரிசு என பல பேர் முட்டி மோதிய போது, 18வது வார்டில் போட்டியிட்ட பா.சிதம்பரம் என்பவர் பேரூராட்சி தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். கட்சிக்காக உழைத்தவரின் பக்கம் ஐ.பெரியசாமி நின்றதன் விளைவாக வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவராக பா.சிதம்பரம் அறிவிக்கப்பட்டு இருப்பதாக திமுகவினர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
கட்சி பதவி அடையாளம் இல்லாமல் நீண்டநாள் உழைத்தவர் என்ற அங்கீகாரம் பெற்றுள்ள பா.சிதம்பரம், தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளது திமுகவினர் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல் பேரூராட்சி துணைத் தலைவராக அதிமுக நகரச் செயலாளர் பீர்முகம்மதுவை எதிர்த்து களம் இறங்கி வென்று திமுக 18க்கு 18 வெற்றி என்பதை உறுதி செய்த திமுக கவுன்சிலர் தர்மலிங்கத்திற்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
வத்தலக்குண்டு பேரூராட்சி வழக்கம் போல் இல்லாமல் புதிய கட்டமைப்போடு அமைச்சர் ஐ.பெரியசாமி உருவாக்கி உள்ளதாக தி.மு.க.வினர் பெருமிதம் கொண்டுள்ளனர்.