Skip to main content

"மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் அளவு உயர்த்தப்பட்டுள்ளது" - அமைச்சர் கே.என்.நேரு 

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

minister nehru talks about self help group loan limit increased 

 

மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்றிருந்த கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் மற்றும் புதிய கடனுதவி வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கியதோடு மீண்டும் கடனுதவி வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தனர்.

 

இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு பேசியது, "மகளிர் சுய உதவிக் குழுவினர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெற்ற 31.3.2021ம் தேதி வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் 2,756 கோடி ரூபாய் மகளிர் குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், சேலம் மாவட்டத்தில் மட்டும் 5241 மகளிர் சுய குழுக்களைச் சேர்ந்த 51,023 பெண்கள் கூட்டுறவு அமைப்புகளில் பெற்றிருந்த 134.40 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் மீண்டும் புதிதாக மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டமும் இன்று முதல் தொடங்கி வைக்கப்படுகிறது.

 

கூட்டுறவு சங்கங்களில் சுய உதவிக்குழுக்கள் உறுப்பினராக சேர்வதற்கு குறைந்தபட்சம் 12 நபர்கள், அதிகபட்சம் 20 நபர்கள் இருக்க வேண்டும். தற்போது, மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் அளவு 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. குழுவின் சேமிப்பு தொகைக்கு ஆறு மடங்காக கடனுதவி வழங்கப்படுகிறது. 36 மாதங்களில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் பொருளாதாரம் மேம்படுகிறது. அவசர கடன் தேவைகளை சுயமாக பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது. கந்துவட்டிக்கு கடன் வாங்குவது தவிர்க்கப்படுகிறது. குடும்ப பொருளாதாரம் உயர்வதோடு பெண்களின் பெயரில் சொத்துக்களை உருவாக்க முடிகிறது" என்று பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் ராஜேந்திரன் மற்றும் அருள், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மீரா பாய், சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்