திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 4.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொது கழிப்பிடங்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான வாகனங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது கழிப்பிடங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினருக்கான 2021-2022க்கான நிதியின் கீழ் 1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தில்லைநகர் காந்திபுரம், பாரதி நகர், உறையூர் குறத்தெரு மற்றும் கொடாப்பு ஆகிய பகுதிகளில் நவீன பொது கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை இந்தியா 2.0 திட்ட நிதியின் கீழ் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறிய ரக சாலை சுத்தம் செய்யும் வாகனத்தையும், 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் தூர்வாரும் 4 வாகனங்கள் தலா 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சிறிய ரக புதை வடிகால் அடைப்பு நீக்கும் 5 வாகனங்கள் தலா ரூபாய் 35 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூபாய்3.68 கோடி மதிப்பீட்டில் 10 வாகனங்களை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன், நகர பொறியாளர் சிவபாதம், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.