"கடந்த ஆட்சியில் திமுகவினரை நடமாட விடமாட்டோம் என்று பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தற்போது நடமாட முடியாமல் ஒளிந்து தலைமறைவாக வாழ்ந்துவருகிறார்" என கிண்டலடித்துப் பேசியுள்ளார் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர்.
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர், இன்று (24.12.2021) உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவிற்கு வந்து தரிசனம் மேற்கொண்டார். தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் அமைச்சருக்கு வரவேற்பு கொடுத்து நினைவுப் பரிசை வழங்கினார். அங்கு நடந்த தொழுகையில் பங்கேற்றுவிட்டு வெளியில் வந்தவர், ராஜேந்திரபாலாஜி தலைமறைவு குறித்தான கேள்விக்குப் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், "கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எதிரியே இல்லை என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்தால் நடமாடவே விடமாட்டோம் என்று சொன்னார் ராஜேந்திரபாலாஜி. ஆனால் அவர் தற்போது தலைமறைவாகியிருக்கிறார். அவர் செய்த தவறுக்கு ஓடி ஒளிந்து பரிகாரம் தேடிவருகிறார். ராஜேந்திரபாலாஜி மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமே உள்ளன. அதனால் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தவறு செய்ததால்தான் தலைமறைவாக ஒளிந்து வாழ்கிறார். மேலும், 2 லட்சத்து 30 ஆயிரம் உற்பத்தியாளர்களுக்குத் தீபாவளி பட்டாசு வழங்கியதில் மோசடி செய்துள்ள விவகாரத்திலும் ஆதாரப்பூர்வமாக சிக்கியுள்ளார். கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்" என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், "அதிமுக ஆட்சியிலேயே திமுக உள்ளாட்சித் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றதுபோல், வருகிற நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் மாபெரும் வெற்றிபெறுவோம். இந்த ஆண்டு பொங்கல் விற்பனைக்கு 130 கோடி ரூபாய் மதிப்பில் நெய் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு தொகுப்பின் 21 பொருட்களில் 100 கிராம் நெய்யும் இடம்பெறும்" என்று கூறினார்.