ஓட்டேரி பகுதிகளில் தண்ணீர் போய்க்கொண்டு தான் இருக்கிறது. நான் அங்கு தான் போகிறேன். நீங்களும் வந்தீர்கள் என்றால் போய் பார்த்துவிடலாம் என நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று இரவு முதல் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், மழைநீர் தேங்குவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதன் விளைவுகளைப் பற்றியும் அமைச்சர்கள், தொடர்ந்து அதிகாரிகளிடம் விசாரித்த வண்ணம் இருக்கின்றனர். மேலும் மழைநீர் வடிகால் பணிகள் நடந்த இடங்களில் நேரடி ஆய்வும் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம் மற்றும் சேகர்பாபு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். கே.என்.நேரு பேசுகையில், “வடிகால் பணிகள் முடிந்த இடங்களில் எந்த இடங்களிலும் தண்ணீர் தேங்கவில்லை. சென்னையில் சராசரியாக 205.47 மி.மீ மழை பெய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகம். அப்படி இருந்தும் பெரும்பான்மையான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. இரு இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. அதுவும் சரி செய்யப்பட்டுவிடும். மழையின் காரணமாக விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. ஓட்டேரி பகுதிகளில் தண்ணீர் போய்க்கொண்டு தான் இருக்கிறது. நான் அங்கு தான் போகிறேன். நீங்களும் வந்தீர்கள் என்றால் போய் பார்த்துவிடலாம்” எனக் கூறினார்.