திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் அவைத் தலைவர் தர்மலிங்கம் தலைமையில், திமுகவின் முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தலைமை உரையாற்றிய அமைச்சர் கே.என் நேரு, “வருகின்ற 4ம் தேதி திருச்சி வரும் தமிழக முதல்வர், மணப்பாறையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித மில்லில் துவங்கப்பட்ட இரண்டாவது அலகை திறந்து வைத்து பார்வையிட உள்ளார். 5ம் தேதி பெரம்பலூரில் நடைபெற உள்ள இந்தி எதிர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். 6ஆம் தேதி அரியலூர் பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கிவிட்டு திருச்சியிலிருந்து மீண்டும் சென்னைக்கு புறப்படுகிறார்.
எனவே நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக முதல்வர் திருச்சிக்கு வருகை தருவதால் மிக பிரம்மாண்டமான உற்சாக வரவேற்பு முதல்வருக்கு வழங்க வேண்டும். கடந்த தேர்தலில் திமுக ஆட்சி அமைப்பதற்கு பெரிய அளவில் வெற்றி வாய்ப்பு தேடித் தந்தது இந்த திருச்சி மாவட்டம் தான். எனவே நாம் அவருக்கு உற்சாகமான வரவேற்பை தர வேண்டும்.
தமிழக கவர்னர் எதிர்க்கட்சி நபரை போல் செயல்படுகிறார். மற்றொரு பக்கம் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறிய விஷயத்தையும் ஊதி பெரிதாக்குகிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவும் இரண்டாக பிளவுபட்டு கிடப்பதை பாஜக பயன்படுத்தி இருவரையும் சேர விடாமல் மிக சாமர்த்தியமாக செயல்படுகிறது. அதேபோல் தற்போது உள்ள அனைத்து அதிகாரிகளும் மத்திய அரசை கண்டு பயப்படுகிறார்கள். பாராளுமன்ற தொகுதியிலும் நாம் 40க்கு 40 என கைப்பற்றி ஆக வேண்டும். அதிலும் திருச்சி உள்ளிட்ட 3 பாராளுமன்ற தொகுதியிலும் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும். அதேபோல் திருச்சியில் நடக்கும் மாற்றம் தான் தமிழகத்தின் மாற்றம் திருச்சியில் நடப்பது தான் தமிழகத்திலும் நடக்கும் என்பதை நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 40ஐயும் கைப்பற்றியே தீரவேண்டும். பாஜகவினரின் செயல்பாடுகளை திமுகவினர் கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும்” என்று பேசினார்.
இக்கூட்டத்தில் மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகரச் செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், பழனியாண்டி, கதிரவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, பரணி குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.