சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் ரூ. 937 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருவதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் இணைந்து நடத்திய வெள்ளம் குறித்த ஒத்திகைப் பயிற்சியினை அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.என். நேரு, “சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் ரூ. 937 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலைகளில் குடிநீர் குழாய்கள், மின்சார வயர்கள் செல்வதன் காரணமாக பணிகள் சற்று மந்தமாக செல்கிறது. விரைந்து முடிக்க தமிழக முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை 576 சாலை பணிகள் நடைபெறுகிறது. இதில் இதுவரை 276 சாலை பணிகள் முற்றிலும் நிறைவு பெற்றுவிட்டது. மீதமுள்ள சாலை பணிகளும் விரைந்து முடிக்கப்படும்" என்றார்.
கடந்த நான்கு தினங்களாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருச்சி முக்கொம்பு மேலணைக்கு தற்போது நீர்வரத்து வினாடிக்கு 1,95,000 கன அடியாக உள்ளது. இதில் காவிரி ஆற்றில் வினாடிக்கு 62, 000 கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1,33,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. எனவே காவிரி, கொள்ளிட ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆறுகளில் இறங்கி குளிக்கவோ, மீன்பிடிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாதெனவும் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில், தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய நபரை எவ்வாறு மீட்பது என்பது குறித்த டெமோ செய்து காட்டியதன் வாயிலாக திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை எந்த நேரமும் தயார் நிலையில் உள்ளது என்பதை எடுத்துக் காட்டினர்.