திருச்சியில் ரூ. 74 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அமைச்சர் கே.என். நேரு வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நேற்று (14.12.2021) 1,730 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 105 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன்கள், நலத் திட்ட உதவிகளை நேரடியாக வழங்கினார்.
சுயஉதவிக் குழுக்களின் முன்னேற்றம் குறித்தும், சுய உதவிக் குழு இயக்கத்தில் இணைந்து அவர்கள் ஆற்றிவரும் பணிகள் குறித்தும், பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்குத் தேவையான உதவிகள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுயஉதவிக் குழு உறுப்பினர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார். திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியைப் போலவே அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த பயனாளிகளுக்கு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
தமிழ்நாடு முழுவதும் நேற்றைய தினம் 58,463 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 749 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு 2,266 சுயஉதவிக் குழுவினர்களைச் சேர்ந்த 27,496 உறுப்பினர்களுக்கு 74.185 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.