திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சோலையூர் மற்றும் ஊசிநாட்டாண் வட்டம் ஆகிய பகுதி நேர கூட்டுறவு நியாய விலை கடைகளில் கரோனா நிவாரணம் 1000 ரூபாய் மற்றும் விலையில்லா அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, "இந்த மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் சுமார் 1108 பேரும், இதேபோல் டெல்லி கூட்டத்தில் கலந்துகொண்ட 26 நபர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தப்லீக் ஜமா அத்தில் கலந்து கொண்டவர்கள் இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த 7 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்றவர்களின் விவரம் இன்னும் கிடைக்கவில்லை . திருப்பத்தூர் மாவட்ட மக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.