முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர்வது பற்றி எங்களுக்கு கவலையில்லை. அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் ஒரு போதும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்றார் அமைச்சர் காமராஜ்.
திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அலிவலம், தப்ளாம்புலியூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புயல் பாதிப்பில் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்கில் இதுவரை ரூ19 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கஜா புயல் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்து ரூ 15,000 கோடி கேட்டுள்ளார். மத்தியகுழு புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை வழங்கியுள்ளது. மத்திய அரசு தமிழக அரசிடம் கூடுதல் தகவல்களை கேட்டுள்ளார்கள். அதுவும் விரைவில் வழங்கப்பட்டுவிடும். அதன் பிறகு மத்திய அரசு உரிய நிதியை வழங்கும் என நம்புகிறோம் என்றார்.
அவரிடம், கஜா புயல் பாதிப்பில் தமிழக அரசு உரிய புள்ளிவிவரங்களை அளிக்கவில்லை என மத்திய அரசு குறை கூறி வரும் நிலையில் மத்திய அரசு முதல்வர் கேட்ட 15 ஆயிரம் கோடியில் 5% கூட வழங்கவில்லை. மத்திய அரசு எப்படி தமிழக அரசு கேட்கும் நிதி வழங்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,
"கண்டிப்பாக பாதிப்புக்கு ஏற்றவாறு மத்திய அரசு உரிய நிதியை வழங்கும்." என்றார்.
அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு "தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆலோசித்து கூட்டணி குறித்து தெரிவிப்பார்கள்." என்றார்.
பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என கூறியிருப்பது குறித்து ?
"நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்க முடியாது. இந்த பதவி நீட்டிப்பு தடை வழங்காதது தமிழக அரசுக்கு ஒருபோதும் பின்னடைவாக இருக்காது." என்றார்.
செந்தில் பாலாஜி திமுகவில் சேர்வது குறித்து ?
செந்தில்பாலாஜி திமுகவில் சேர்வது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் ஒரு போதும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள்" என முடித்தார்
அமைச்சர் காமராஜ்.